மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பேருந்தில் 20 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று(செப்ரெம்பர் 26) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த பேருந்தில் ஆசிரியை ஒருவரும் பயணித்துள்ளார்.
குறித்த ஆசிரியை வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக இறங்கியுள்ளார்.இறங்கும் தருணத்தில் தனது கைப்பை திறந்திருப்பதையும் அதிலிருந்த தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமையையும் அவதானித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த ஆசிரியை பேருந்து நடத்துனரிடம் அறிவித்தமையை தொடர்ந்து பயணிகள் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் கிடைக்காமையை தொடர்ந்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஆசிரியை முறைப்பாடளித்துள்ளார்.இந்த நிலையில் பேருந்தில் பயணித்து முன்னதாக இறங்கிய பயணிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய மகாறம்பைக்குளத்தில் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் இறங்கியமை கண்டறியப்பட்டுள்ளது.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து கொள்ளையிடப்பட்ட 20 பவுண் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட கொள்ளையிடப்பட்ட மேலும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
புத்தளம் 4 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த குறித்த நால்வரும் மகாறம்பைக்குளத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் என்பதோடு திட்டமிட்டு கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நால்வரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.