பொதுமக்கள் வீதிகளில் நடமாடுதல் பண்டிகைகளை கொண்டாடுதல் போன்ற விடயங்கைளை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,
“தற்போது யாழ் குடாநாட்டில் கொரோனா தொற்று பரவுகின்ற வீதம் சற்று குறைவடைந்துள்ளது. ஒக்டோபர் மாதத்தின் பின்னர் 120 பேர் யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அதிலே 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களுடன் தொடர்புபட்ட வகையில் சுய தனிமைப் படுத்தலுக்குட்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது. 2,176 குடும்பங்களைச் சேர்ந்த 6,109 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அரசின் சுற்றுநிருபங்களுக்கமைய அவர்களுக்கு தேவையான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் தொற்று இனங்காணப்பட்டவர்களுக்கும் அரசினுடைய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இப்போது பண்டிகை காலமாக இருக்கின்ற காரணத்தினால் சைவ ஆலயங்களில் விரத பூசைகள் இடம்பெற்றுவருகின்றன. நத்தார் தினம் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற உள்ளன. பொதுமக்கள் தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகவும் கவனமாகச் செயற்படுத்த வேண்டும். அநாவசியமாக கடைகளுக்கு செல்லுதல் அல்லது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடைக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும் அநாவசியமான ஒன்று கூடல்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கொரோனா சவாலுக்கு அனைவரும் ஒத்துழைத்து செயற்படுவதன் மூலம் எமது மாவட்டத்தினை தொற்றில் இருந்து காப்பாற்ற முடியும்” – எனவும் தெரிவித்தார்