நெடுந்தீவு கல்விக் கோட்டத்தினுடைய கல்வி வளர்ச்சியென்பது மெல்லமெல்ல உயர்வடைந்து செல்வதை கடந்த வருடம் இடம்பெற்ற உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் கோடிட்டு காட்டுவதாக நெடுந்தீவு சைவப்பிரகாசா வித்தியாலயத்தின் அதிபர் அ. பீலிஸ் ஜேக்கப் அவர்கள் தெரிவித்தார்.
புனித ஜோவான் கல்வியகத்தில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வில் சிறப்பு அதிதியாக பிரசன்னமாகி உரைநிகழ்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 17 மாணவர்களில் எழுவர் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியையும் புலமைப்பரிசில் பரீட்சையில் ஐவர் வெட்டுப்புள்ளிகளுக்கு உயர்வாக பெற்றும் அனேக பாடசாலைகள் நூறு வீத சித்தியையும் அடைந்துள்ளன.
இலங்கையில் ஏனைய பிரதேசங்களின் பரீட்சை அடைவுமட்ட விகிதாசாரத்தின் ஒப்பீட்டின் பிரகாரமும் அதிகஸ்ர பிரதேசமொன்றின் வறுமை மற்றும் கல்வி வாய்ப்புக்களை முழுமையாக நாம்பியும் பயன்படுத்தியும் பெறப்பட்ட வெற்றிகள் தீவின் கல்வி வளர்ச்சிப்போக்கை ஆரோக்கியமானதாக காண்பிக்கிறது என்றார்.
புலம்பெயர் உறவுகளால் தமது கஸ்ரங்களுக்கு மத்தியில் ஒதுக்கிக்கொள்ளும் நிதியிலிருந்து இயக்கப்படும் தூய யோவான் கல்வியக பணியானது மெச்சுதற்குரியது என்றும் அவர்களின் உழைப்புக்கள் நம்பிக்கைகள் வீணாகாத வகையில் முழுமையாக பயன்பெறுவது அனைவரினதும் பொறுப்பென்றும் அதற்கான பலாபலன்களை எமது மாணவர்கள் நிச்சயம் வழங்குவார் எனவும் தனது உரையில் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.