நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகானது கடந்த வாரம் நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த வேளையில் அதன் இயந்திரப் பகுதியில் சீனி போடப்பட்டு அதன் இயந்திரத்தில் பாரிய கோளாறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
துறைமுகப் பகுதியில் இருந்து படகு புறப்பட இருந்தவேளை இயந்திரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது இதன்பின்னர் படகு இயந்திரத்தினை பரிசோதித்த போது இயந்திரப் பகுதியில் விசமிகளால் சீனி போடப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினரால் நெடுந்திவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் , மாவிலி துறைமுகத்தின் பாதுகாப்பு கருதி தனிநபர் ஒருவரால் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்டு கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே சம்பவம் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் நாட்களின் உள்ளவாறான கமரா பதிவுகளையும் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவில் சேவையில் உள்ள அரச இயந்திர படகுகள் பழுதடைந்து இருக்கும் காலப்பகுதிகளில் கூட்டுறவு சங்கத்தின் படகே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதுடன் பெரும்பாலான நேரங்களில் பயணிகளின் சேவையில் ஈடுபட்டு வரும் இப்படகானது திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டதா என சந்தேகம் கொள்வதாகவும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.