திருவள்ளுவர் நாள் மற்றும் உலக மகளிர்நாள் என்பன கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இன்று (மார்ச் 8) காலை ஒருசேர அனுட்டிக்கப்பட்டன.
கலாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாசாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு மாசி உத்தர நாளில் இடம்பெறும் திருவள்ளுவர் குருபூசையை அனுட்டிக்கும் வகையில் மலர் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
கலாசாலை அதிபர், அதிதிப் பேச்சாளராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல், மற்றும் விரிவுரையாளர்கள் ஆசிரிய மாணவர்கள் என அனைவரும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்ற அரங்க நிகழ்வுகளில் பிள்ளைகளை மையப்படுத்திய கல்வியும் பெண்களும் என்ற பொருளில் கலாசாலை விரிவுரையாளர் பிரபாலினி தனமும் வள்ளுவம் தந்த வள்ளுவர் என்ற பொருளில் தமிழ் சிறப்பு நெறி ஆசிரிய மாணவி எம்.ஏ. சமீனாவும் வள்ளுவரும் பெண்மையும் என்ற பொருளில் ;இரா. செல்வவடிவேலும் உரையாற்றினர்.
நிகழ்வுகள் உடற்கல்வி A வகுப்பு ஏற்பாட்டில் இடம்பெற்றன. கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் தினமும் காலைப் பிரார்த்தனையின்போது திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்துக் குறட்பாக்கள் பாடப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.