பூமணி அம்மா அறக்கட்டளையின் மனிதாபிமான உதவிப் பணியாக ஊர்காவற்றுறையில் வறிய நிலையிலுள்ள முதியோர்களுக்கு இலவசமாக மதிய போசனம் வழங்குவதற்கென உணவு வழங்கும் நிலையம் நேற்று முன்தினம் (29 செப்டம்பர்) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் பிற்பகல் 02 மணிக்கு, பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும், பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலியின் பணிப்பாளருமான வேலணையைச் சேர்ந்த செல்வராசாவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உணவு வழங்கும் நிலையத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். அத்துடன் உணவு வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக் கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம், மேற்படி அறக்கட்டளையின் யாழ்.கிளைத் தலைவர் தனேந்திரன், ஆலோசகர் மயில்வாகனம், சமூக சேவையாளர்களான பாஸ்கரன், தெய்வேந்திரம், கிராம சேவையாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.