உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொடவினால் முன்வைக்கப்பட்ட மூன்று தனிநபர் சட்டவரைபுகளும் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது.
மூன்று சட்ட வரைபுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தனது முடிவை எடுத்துள்ளது.
நெருக்கடி காரணமாக தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டால், கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரங்களை அமைச்சருக்கு வழங்குவதற்கான சட்டங்களை திருத்துவதற்கு மூன்று தனிநபர் சட்டவரைபுகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதன்படி, 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம், மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 252) மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 255) ஆகியவற்றை திருத்துவதற்கு முன்மொழியப்பட்ட சட்டவரைபுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நெருக்கடி காரணமாக மேற்படி தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில், 12 மாதங்கள் கடந்தாலும் அமைச்சரின் விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்கப்பட்ட ஒரு காலத்திற்கு உள்ளூராட்சி மன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு விடய அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படும்.
சட்டவரைபுகள் நாடாளுமன்றத்தில் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும், மேலும் அவை பொது வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் சட்டமாக மாற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகிய போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.