இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 22 இந்திய மீனவர்களில் 21 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் மீனவர்கள் 22 பேரும் இன்று(ஜூலை 5) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சிறைத்தண்டனை எனும் நிபந்தனையின் கீழ் 21 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
22 ஆவது சந்தேகநபர் 16 வயதுடையவர் என்பதனால், அவரது எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றம் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யாமல் விடுவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் 10 ஆயிரம் ரூபா நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் இழுவைமடி பயன்பாடு, கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி இலங்கை கடலில் தொழிலில் ஈடுபட்டமை மற்றும் கடற்படையினர் தடுத்து நிறுத்தும் வரை தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபட்டமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய மீனவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளில் இரு படகுகளை அரசுடைமையாக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மற்றைய இரு படகுகளுக்கான உரிமையாளர் இல்லாமையால், படகு உரிமை கோரிக்கை வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட போது, கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இந்திய மீனவர்கள் 22 பேரும் கைது செய்யப்பட்டனர்.