மொழிகளைக் கடந்து மனிதநேயத்துடன் சேவையாற்றிய தாதியர்கள்-பணிப்பாளர் சத்தியமூர்த்தி!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த மூன்று வருடங்களாகச் சிறப்பாகக் கடமையாற்றிய மாற்றலாகிச் செல்லும் தாதியர்களது பிரிவுபசார நிகழ்வில் “மொழிகளைக் கடந்து மனிதநேயத்துடன் சேவையாற்றிய தாதியர்கள்” என பாராட்டி வாழ்த்திக்கூறினார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி .

அவர் மேலும் தெரிவிக்கையில்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவையில் தாதிய உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. இரவு பகலாக நோயாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் கடமையாற்றும் வைத்தியசாலையின் அனைத்து தாதிய உத்தியோகத்தர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த மூன்று வருடங்களாகச் சிறப்பாகக் கடமையாற்றிய, வடக்கு மாகாணத்திற்கு வெளியேயிருந்து வருகை தந்த 54 தாதிய உத்தியோகத்தர்கள் தமது மூன்று வருட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்து வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 49 தாதிய உத்தியோகத்தர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர்.

இவர்களது சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு, அவர்களது அர்ப்பணிப்பு மிக்க சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டியிருந்தனர்

குறிப்பாக, இவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள மொழி பேசுபவர்களாக இருந்தபோதிலும், மொழி வேறுபாடுகளைக் கடந்து எமது பிரதேச மக்களை அன்போடும், பணிவோடும், கருணையோடும் பராமரித்து, சிறப்பான தாதிய சேவையை வழங்கியுள்ளனர்.

தமது சொந்தப் பிரதேசங்களையும் குடும்பங்களையும் பிரிந்து, புதிய சூழலிலும் மொழிச் சவால்களுக்கு மத்தியிலும் அவர்கள் வெளிப்படுத்திய கடமை உணர்வும் அர்ப்பணிப்பும் மிகவும் பாராட்டத்தக்கவை.

மருத்துவ சேவையில் மொழி, இனம், மதம், பிரதேசம் என்பவற்றைக் கடந்து மனிதநேயமே முதன்மையானது என்பதைத் தமது சேவையின் ஊடாக அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இத்தகைய சேவைகள் இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்துகின்றன.

இம்மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 150 தாதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, மூன்று வருட சேவைக்காலத்தை நிறைவு செய்த 54 தாதிய உத்தியோகத்தர்கள் விடைபெற்றுள்ளதுடன், மேலும் 49 பேர் விரைவில் விடைபெறவுள்ளனர்.

புதிதாக எமது வைத்தியசாலையில் இணைந்துள்ள தாதிய உத்தியோகத்தர்களை அன்புடன் வரவேற்பதோடு, ஏற்கனவே இங்கு சிறப்பாகக் கடமையாற்றியவர்களின் சேவை அவர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என நம்புகின்றேன்.

வைத்தியசாலையின் பணிப்பாளர் என்ற வகையில், கடந்த மூன்று வருடங்களாக எமது வைத்தியசாலைக்கும் எமது பிரதேச மக்களுக்கும் அவர்கள் வழங்கிய பெறுமதிமிக்க சேவைகளுக்காக எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவர்கள் செல்லும் புதிய பணியிடங்களிலும் சிறப்பாகக் கடமையாற்றவும், அவர்களது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மேலும் பல வெற்றிகளைப் பெறவும் மனதார வாழ்த்துகின்றேன்.

நீங்கள் எமது வைத்தியசாலையிலிருந்து விடைபெற்றாலும், உங்கள் அன்பும் அர்ப்பணிப்பும் மனிதநேயமிக்க சேவையும் எமது மக்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.

அனைத்து தாதிய உத்தியோகத்தர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்

Share this Article
Leave a comment