இலங்கையின் சட்ட மாஅதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதான வழக்கறிஞர் ஜெனரல் அலெக்சாண்டர் குட்சன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (26/11) வியாழக்கிழமை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, 21 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவுடன் ரஷ்யப் பிரதான வழக்கறிஞர் ஜெனரல் நேற்றிரவு விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ரஷ்யப் பிரதான வழக்கறிஞர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இரு நாடுகளின் சட்டத்துறை வரலாற்றிலும் இதுவே முதல் முறையாகும்.
இன்றைய சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் மேம்படுத்தல் மற்றும் சட்டரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கண்டறிந்து மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டு ரஷ்யாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சொத்துக்களை இலங்கையின் ‘குற்றச் செயல்களின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் சட்டத்தின்’ கீழ் மீளப் பெறுவதற்கும் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்க ரஷ்யத் தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான சட்டரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை சட்டமா அதிபர் மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதான வழக்கறிஞர் ஜெனரல் ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது இந்த விஜயத்தின் போது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் நீல் இத்தவலவையும் ரஷ்யப் பிரதான வழக்கறிஞர் ஜெனரல் இன்று சந்தித்துள்ளார். இதன்போது, எல்லைகள் கடந்து ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கும், தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் இரு நாடுகளின் ஊழல் தடுப்பு நிறுவனங்களுக்கு இடையில் மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.