ஏர்பஸ் நிறுவனத்தின் புதிய A350F சரக்கு விமானம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஐரோப்பாவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், தனது புதிய A350F ரக சரக்கு விமானத்தின் முதற்கட்ட சோதனைப் பறப்பை நேற்று (29.09) பிரான்ஸின் டுலூஸ் நகரில் வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளது.

ஜன்னல்கள் இல்லாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம், சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டது.

எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு வணிக ரீதியிலான சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்னர், ஒன்பது மாத கால சான்றிதழ் சோதனைகளுக்கு இந்த விமானம் உட்படுத்தப்படவுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாகக் கடல்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை, அத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாகக் கணினிச் சிப்புகள் மற்றும் சேவையகங்களுக்கான (servers) தேவை அதிகரித்துள்ளமை போன்ற காரணங்களால் வான்வழிச் சரக்குப் போக்குவரத்திற்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது.

பல தசாப்தங்களாகச் சரக்கு விமான சந்தையில் போயிங் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதற்குச் சவாலாக ஏர்பஸ் நிறுவனம் 2021-ஆம் ஆண்டு முதல் இந்த A350F ரக விமான தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்தது.

இதுவரை ஏர்பஸ் நிறுவனம் 115 A350F விமானங்களுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ள அதேவேளை, போயிங் நிறுவனம் தனது 777-8F ரகத்திற்காக 81 முன்பதிவுகளை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Share this Article
Leave a comment