பாடசாலை மாணவர்களை குறிவைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் இருவர், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இன்று (16/06) ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 45 மற்றும் 49 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸார் தெரிவித்ததாவது, குறித்த நபர்கள் நீண்டகாலமாக வேலணை மற்றும் தீவகப் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை, களவு மற்றும் பிற சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், குறிப்பாக பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்ததாக பல முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வினோத் தலைமையிலான குழுவினர் விசேட நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன் போது அல்லைப்பிட்டி சந்திப் பகுதியிலும் தேவாலயப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி சோதனைகளில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தீவகப் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், சமூகத்தை பாதுகாக்க பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.