வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இரண்டாம் கட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் வியாழக்கிழமை (14/05) ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலுக்கு முன்னதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், காவல்துறையினர், பிரதேச சபையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து வீதி மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பான கள ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வீதிகளை ஒருவழிப்பாதையாக பயன்படுத்துதல், வாகன தரிப்பிடங்களை ஒழுங்குபடுத்துதல், மக்கள் மற்றும் வாகன நெரிசலை குறைக்கும் நடைமுறைகள் போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
இம்முறை விசேட அனுமதி வாகனங்களுக்கு வழங்கப்படமாட்டாது.
தூக்குக்காவடி, நோயாளர் காவு வண்டி, கழிவு அகற்றும் வாகனங்கள், நீர் தாங்கி வாகனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளைத் தவிர பிற வாகனங்கள் ஆலய பிரதான வாயிலினூடாக உட்செல்ல முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு– மாங்குளம் வீதியினூடாக வருகை தரும் வாகனங்கள் மூன்றாம் கட்டை சந்தி வழியாக ஒழுங்குபடுத்தப்பட்ட தரிப்பிடங்களுக்கு அனுப்பப்படும்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான விசேட தரிப்பிட வசதிகள் ஆலயத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏனைய அனைத்து வாகனங்களும் ஒதுக்கப்பட்ட தரிப்பிடங்களில் நிறுத்தப்பட வேண்டும். தரிப்பிடங்களிலிருந்து வெளியேறும் வாகனங்கள் குறிப்பிட்ட வெளியேறும் பாதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
புதுக்குடியிருப்பு – கேப்பாபிலவு ஊடாக வரும் வாகனங்களுக்கு தனியான நுழைவு மற்றும் வெளியேறும் வழிமுறைகள் தரிப்பிடம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
அதிக மக்கள் நெரிசல் ஏற்படும் நேரங்களில் விபத்து அல்லது அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடை உரிமையாளர்கள் தங்களது பொருட்களை இறக்கிய பின்னர் வாகனங்களை உடனடியாக தரிப்பிடங்களுக்கு மாற்ற வேண்டும். ஆலய வளாகத்திற்குள் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்தி வைப்பது அனுமதிக்கப்படமாட்டாது.
கடந்த ஆண்டுகளில் வாகன நெரிசல் மற்றும் உரிமையாளர்களை அடையாளம் காண முடியாத நிலைமைகள் ஏற்பட்டிருந்ததால், இம்முறை கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுகின்றன.
தூக்குக்காவடிகளுடன் வரும் டிராக்டர்கள் மற்றும் வாகனங்களை உரிய சாரதி அனுமதிப்பத்திரம் கொண்டவர்களே இயக்க வேண்டும். சனநெரிசலான சூழலில் அனுமதிப்பத்திரமற்றோர் வாகனம் செலுத்துவது விபத்துகளுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளும் காவல்துறையினரின் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் மட்டுமே நடைபெறும். எனவே பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகினர்
.