SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “சுரகிமு லங்கா” (இலங்கையை காப்போம்) தேசிய திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இது தொடர்பில் ஒத்துழைப்பு நல்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அரச வளங்களை மிக சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், தேசிய வலுசக்தி பாதுகாப்பிற்காக பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் பிரதான எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளதுடன் இந்தத் திட்டம் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

“செல்வச் செழிப்புமிக்க நாடு – அழகான வாழ்க்கை” எனும் தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘Clean Sri Lanka’ திட்டத்தின் ஒரு பகுதியாக, “சுரகிமு லங்கா – ஒன்றிணைவோம் – ஒளியூட்டுவோம்” என்ற தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது.

இதற்காக அரச, அரச அனுசரணை மற்றும் தனியார் துறையினருடன் சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்து முடிக்க மக்களை ஊக்குவிப்பதே “சுரகிமு லங்கா” திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எவ்வித தடைகளும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர் மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரையும் மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்களிடையே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தாமாகவே முன்வந்து இத்திட்டத்தில் இணையச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும்.

Share this Article
Leave a comment