கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், அமைந்துள்ள கண்டாவளைப் பாலம், பல ஆண்டுகளாக மக்களின் உயிர்களையும் கண்ணீரையும் சுமந்த துயர நினைவிடமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் புதிய அடையாளத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
2020 இல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் பணிகள் மந்தகதியிலேயே முன்னெடுக்கப்பட்டு பின்னர் அனுர அரசாங்கம் பதவியேற்கும் வரையிலும் முழுமையான முன்னேற்றம் காணப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தப் பாலத்தில் இடம்பெற்ற பல விபத்துகள் அப்பகுதி மக்களின் மனதில் ஆறாத காயங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் இரத்தக் கறைகள் படிந்த பாலம்” என்ற வேதனையான அடையாளத்தோடு இந்தப் பாலம் நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் இவ் அரசாங்கம் கண்டாவளைப் பகுதியில் முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில் இந்தப் பாலத் திட்டமும் ஒன்றாக அமைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, தற்போது பாலத்தின் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய தரத்திலான பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் 17 வருடமாக நிலவிய போக்குவரத்து சிரமங்களுக்கும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உருவாகியுள்ளது.
மேலும், அபிவிருத்திப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இந்தப் பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.