திருகோணமலை, மூதூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சாரதியிடம் 1,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்புக் கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை மற்றும் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய குறித்த அதிகாரியை பணியில் இருந்து இடை நிறுத்துவதற்கு திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி இரவு நடமாடும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த கான்ஸ்டபிள் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதன்போது கையடக்க தொலைபேசியினால் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்றை பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபருக்கு எதிராக மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது