முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்பப் பெண் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

புதியகுடியிருப்பு கிராமத்தில் அதிகாலையில் வீட்டினுள் தாயும் மூன்று பிள்ளைகளும் உறங்கி கொண்டிருந்த வேளையில், வீட்டுக் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர், அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குள்ளான பெண் கூக்குரல் இட்டமையையடுத்து அயலவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயினை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பொலிஸார் தடயவியல் பொலிஸார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.