தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜுலைக்குள் தீர்வு! – தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளிடம் ரணில் உறுதி!

Anarkali
Anarkali  - Senior Editor
2 Min Read

தமிழ்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நிலைப்பாட்டில் எத்தகைய மாற்றமும் இல்லை என்றும், எதிர்வரும் ஜுலை மாதத்துக்குள் இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண்பதற்கு முயற்சிப்பதாகவும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்புக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியுடனான தொடர் பேச்சுவார்த்தைகள் மற்றும் இழுத்தடிக்கப்படும் தீர்வு என்பன குறித்து எடுத்துரைக்கும் நோக்கில் தமிழரசுக்கட்சியினால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைவாகவே இச்சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி அலுவலகப்பிரதானியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சட்டமா அதிபர், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். அதேவேளை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சித்தரப்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றபோதிலும், தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை வழங்காமல் தொடர்ச்சியாக இழுத்தடிப்புச்செய்துவருவது குறித்து ஜனாதிபதியிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பந்தன், இந்த நிலை தொடரும் பட்சத்தில் தாம் தீர்க்கமானதொரு முடிவை எடுக்கவேண்டியேற்படும் என்றும் எச்சரித்தார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி தனக்கு எதிர்வரும் ஜுலை மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறும், அதற்குள் அதிகாரப்பகிர்வு, காணி விடுவிப்பு, அரசியல்கைதிகள் விவகாரம் என்பன உள்ளடங்கலாகத் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வொன்றை எட்ட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதனை முற்றாக மறுக்காதபோதிலும், மீண்டும் தமது அதிருப்தியை வெளிப்படுத்திய சம்பந்தன், இவ்வாறு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதால் எவ்வித பயனுமில்லை என்றும், இவற்றால் தாம் ஏமாற்றமடைந்திருப்பதாகவும் தெரிவித்ததுடன், இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை சார்ந்த தீர்மானமொன்றை எடுக்கவேண்டிய நிலையேற்படும் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்கள் குறித்து பேசப்பட்டபோது, அங்கிருந்த தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கடுந்தொனியில் பேசிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சி, தையிட்டி, மயிலிட்டி ஆகிய பகுதிகளில் நிலவும் காணிப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

மேலும் இதன்போது மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடத்தவேண்டுமென தமிழரசுக்கட்சி உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் தேர்தல் செயன்முறையில் காணப்படும் சட்டரீதியான சிக்கல்களைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை நிவர்த்தி செய்ததன் பின்னர் தேர்தலை நடத்தமுடியும் என்று குறிப்பிட்டதுடன் மாகாணசபைகளுக்கு கல்விசார் அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுவருவது பற்றியும் பிரஸ்தாபித்தார்.

அதேபோன்று உண்மையைக் கண்டறியும் பொறிமுறை தொடர்பில் அரசாங்கத்தரப்பினரால் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் கடந்தகால உள்ளகப்பொறிமுறைகள் மற்றும் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இந்த உண்மையைக் கண்டறியும் பொறிமுறையிலும் பெருமளவுக்கு நம்பிக்கைவைக்கமுடியாமல் இருப்பதாகக் குறிப்பிட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், இதுகுறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர்.

Share this Article