தீவகப் பகுதிகளில் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை புதிய நடைமுறை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தீவகப் பகுதிகளுக்குள் உள்நுழையும் வெளிச் செல்லும் பயணிகளின் பெயர் விபரங்கள் அனைத்தும் துறைமுகப் பகுதிகளில் வைத்து பதிவு செய்யும் நடைமுறை நேற்று (மார்ச் 27) முதல் எதிர்வரும் ஏப்ரல் 30 திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ் மாவட்ட செயலக அறிவுறுத்தலுக்கு அமைய பிரதேச செயலக அலுவலர்களால் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுகிறது.

தீவுப் பகுதிகளின் போக்குவரத்தை வினைத்திறனுடன் அதிகரித்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இந்தவகையில் நெடுந்தீவுப் பிரதேசத்திலும் உள் நுழைகின்ற வெளியேறுகின்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவிகள் தொடர்பான விபரங்கள் பதிவு செய்யும் நடைமுறை முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனைக்கு அமைய இம்மாதம் 8 திகதி யாழ் மாவட்ட செயலர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர்,மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

நெடுந்தீவு பிரதேசத்துக்குள் உள்வரும் வெளிச்செல்லும் சகல படகுகளிலும் வந்து செல்வோர் விபரம் அட்டவணைப்படி தயாரிக்கப்பட்டு யாழ் மாவட்ட செயலகத்துக்கு வழங்கும் வகையிலேயே இந்நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

Share this Article