வீட்டிலிருந்தவர்களைத் துன்புறுத்திக் கொள்ளை – நால்வர் பொலிஸாரால் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வீடொன்றுக்குள் புகுந்து வீட்டிலிருந்தவர்களை வாள்களைக் காட்டி அச்சுறுத்திக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 3ஆமு் திகதி அதிகாலை கோப்பாயில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஐந்து கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்கள் வாள்முனையில் அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையிட்டனர்.

வீட்டில் இருந்த 3 பெண்களை அடித்துத் துன்புறுத்தியும், வயோதிபர்களை அச்சுறுத்தியும் 12 பவுண் நகைகள் கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் சுன்னாகம், இணுவில் பகுதிகளைச் சேர்ந்த 25, 26 வயதுகளையுடைய நால்வர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையிட்ட நகைகளில் ஒரு பகுதி, நகைகள் அடகு வைக்கப்பட்ட பற்றுச்சீட்டுகள் மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, கடந்த ஜனவரி 15ஆம் திகதி தைப்பொங்கள் தினத்தன்று வீதியில் சென்ற ஆசிரியை தாக்கிவிட்டு நகையை கொள்ளையிட்ட சம்பவத்துடனும் இவர்களுக்குத் தொடர்புள்ளமை விசாரகைளில் கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share this Article