யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4,111 பேர் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம், நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், தேர்தலில் 4 ஆயிரத்து 111 பேர் போட்டியிடுகின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும், 15 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன என்று யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் ஊடகங்களைச் சந்தித்த அவர், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தபோது இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

13 அரசியல் கட்சிகள் சார்பாக 135 வேட்பு மனுக்களும், 15 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 15 வேட்பு மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளன.

உள்ளூராட்சி மன்றச் சட்டத்தின்படி, அந்ததந்த வட்டாரங்களில் வைத்து வாக்குகள் எண்ணப்பட்டு, வட்டாரங்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணுவதற்காக 243 வாக்கு எண்ணும் நிலையங்கள் உருவாக்கப்படும்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சிச் சபைகளுக்கும் வட்டார அடிப்படையில் 243 உறுப்பினர்களும், கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தெரிந்து அனுப்பப்பட வேண்டிய 159 உறுப்பினர்களும் மொத்தமாக 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Share this Article