காலாவதியான பொருட்களை விற்றவர்களுக்கு 5 இலட்சம் அபாரதம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ் மாநகரசபை பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையங்கள் கிரமமாக ஒவ்வொரு மாதமும் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம், 12 ஆம் திகதிகளிலும் ஜனவரி மாதம் 17 ஆம், 18 ஆம் திகதிகளிலும் யாழ் மாநகர சபைக்குட்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுகளில் யாழ் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பலசரக்கு வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டன.

இதன்போது திகதி காலாவதியான உணவுப் பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத உணவு பொருட்கள் மற்றும் வண்டு மொய்த்த உணவு பொருட்கள் என ஏராளமான மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் மாநகர சபைக்குட்பட்ட யாழ்நகர், நல்லூர், வண்ணார்பண்ணை பொதுச் சுகாதார பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களை நீதிமன்றில் ஒப்படைத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 20 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர்.

வழக்குகள் இன்றையதினம் (ஜனவரி 25) மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கடை உரிமையாளர்கள் அனைவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.

இதையடுத்து 20 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் மொத்தமாக 5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது.

Share this Article