வடமாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், வலிகாமம் மேற்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய “தமிழின் பாரம்பரியம் – நம் பெருமை” எனும் தொனிப்பொருளிலான பண்பாட்டுப் பெருவிழா நேற்றையதினம் (18.09) சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளரும் பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவருமான திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாகவும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் தர்சினி நிதர்ஷன் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் மாவட்டச் செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி மாலினி கிருஸ்ணானந்தன், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபர் திருமதி கணேசமூர்த்தி சுலபாமதி, தொல்புரம் மிருதங்கக் கலைஞர் கலாபூஷணம் திரு. மாரிமுத்து சிதம்பரநாதன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் சங்கீதபூஷணம் அமரர் எஸ். கணபதிப்பிள்ளை நினைவுகூரப்பட்டதுடன் , பிரதேச செயலக சமூர்த்தி உத்தியோகத்தர் அமரர் தர்சன் அவர்களின் சமூக மற்றும் கலை, கலாசாரப் பணிகள் பாராட்டப்பட்டு அவரது குடும்பத்தினர் கௌரவிப்பும் இடம்பெற்றது
இதனைத் தொடர்ந்து கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ‘கலை வாரிதி’ விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றதுடன் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இளம் கலைஞர் விருது’ வழங்கலும் இடம்பெற்றது.