5 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுமி, 2 மாதக் குழந்தையுடன் மீட்பு !!

SUB EDITOR
SUB EDITOR
3 Min Read

ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி ஒருவர் இரண்டு மாத கைக்குழந்தை ஒன்றுடன் அடர்ந்த வனப்பகுதியில் குகை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகில் அமைந்துள்ள உடுதும்புரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமுரே, கந்தகெட்டிய பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தார்.

 அவரது குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சிறுமியை தேடிய போதிலும் அவரை கண்டறியமுடியவில்லை.

 இது தொடர்பில் உடுதும்புரை பொலிஸ் நிலையத்திலும் அவர்கள் முறைப்பாடு அளித்திருந்தனர்.

 இந்நிலையில், உடுதும்புரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித தொம்பகம்மனவின் தலைமையில் விசேட விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

 எனினும் சிறுமி தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் விசாரணையில் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.

 இருப்பினும் சிறுமி அன்றாடம் செல்லும் இடங்கள், நண்பர்கள் என அனைத்து வழிகள் குறித்தும் பொலிஸார் ஆய்வு செய்து வந்தனர்.

 இதன்போதுதான் பொலிஸாருக்கு முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

 அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றிலிருந்து நபர் ஒருவருக்கு தேவையானதை விட அதிகளவான அரிசியை தினமும் எடுத்துச் செல்லும் இளைஞர் ஒருவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

 அதற்கமைய, குறித்த இளைஞர் மீது பொலிஸ் விசாரணை அதிகாரிகள் கவனத்தை திருப்பியிருந்தனர்.

 பின்னர் அவரைப் தொடர்ந்தும் கண்காணித்து வந்த நிலையில், குறித்த இளைஞரை பின்தொடர்ந்து சென்றனர்.

 அப்போது குறித்த இளைஞர் அரிசியுடன் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்குச் சென்ற போது, மேலும் அவர் மீது சந்தேகம் அதிகரிக்க பொலிஸாரும் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.

 இதன்போது அங்கு பிளாஸ்டிக், துணிகளால் மூடப்பட்ட கல் குகை ஒன்றில், இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் சிறு வயது தாய் ஒருவர் இருப்பது பொலிஸாரால் அவதானிக்கப்பட்டுள்ளது.

 அதன்பின்னர் உடனடியாக விரைந்து சென்ற பொலிஸார் குகையினை சுற்றிவளைத்துள்ளனர்.

 இதன்போது ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாகப் முறைப்பாடளிக்கப்பட்ட 15 வயது சிறுமிதான் இவர் என்பதை பொலிஸார் அங்கு உறுதிப்படுத்திக் கொண்டனர்.

 இதனைத் தொடர்ந்து, அக்குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறு வயது தாயும் இரண்டு மாதப் பெண் குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட சிறுமியிடமும் 23 வயது இளைஞரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கல் குகைக்குள்ளேயே குழந்தை பிரசவிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

 பிரசவத்திற்குப் பின்னர், கிதுல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான ஆயுதத்தினால் குழந்தையின் தொப்புள்கொடி அறுக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 மேலும், காட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நாட்டு மருந்துகளைப் பயன்படுத்தி தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், கிதுல் தொழிலில் பாணி காய்ச்சப் பயன்படுத்தும் தாச்சியில் குழந்தை குளிப்பாட்டப்பட்டதாகவும் 23 வயது தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும், குறித்த இளைஞருக்கு உதவிய அவரது 36 வயது உறவினரொருவரையும் உடுதும்புரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 பொலிஸார் பாதுகாப்பின் கீழ் எடுக்கப்பட்ட இரண்டு மாதப் பெண் குழந்தையையும் சிறு வயது தாயையும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

 சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உடுதும்புரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article
Leave a comment