கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 764 ஏக்கர் காணிகள் வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆளுகையில் உள்ளன.
மக்களின் வதிவிடங்கள், வயற்காணிகள், ஏனைய அபிவிருத்திக்கான காணிகள் என அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்று (பெப்ரவரி 22) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச செயலர்கள், வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்டச் செயலர் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி செயலகத்தின் சமூக விவகாரப் பணிப்பாளர் நாயகம் இந்த விடயம் தொடர்பில் ஆராய எமது மாவட்டச் செயலகத்துக்கு வந்திருந்ததுடன், களப் பயணம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார். அதன் தொடர் நடவடிக்கையாகவே கலந்துரையாடல் நடைபெற்றது.
வனவளத் திணைக்களத்துக்கும், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் உட்பட்ட காணிகளில் பொதுமக்கள் தேவைக்குப் பயன்படுத்தப்படும் காணிகள், எதிர்வரும் காலங்களில் அபிவிருத்திக்குத் தேவையான காணிகள் என்ற அடிப்படையில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது– என்றார்.