யூனியன் கல்லூரி மோதல் மத அடிப்படை கொண்டதல்ல; பழமையை பாதுகாக்க வேண்டும் – கிறிஸ்தவ பாதிரியார்கள் தெரிவிப்பு.
வலி.வடக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி உட்பட யாழ்.மாவட்டத்தில் 150 க்கும்மேற்பட்ட பாடசாலைகளை அமெரிக்க மிஷன் நிர்வகித்து வந்தது .
1962 காலப் பகுதியில் அரசாங்கத்தினால் பாடசாலைகள் சுவீகரிக்கும் போது யூனியன் கல்லூரி உட்பட பல பாடசாலைகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் எமது நோக்கத்தை அரசாங்கத்திற்கு தௌிவுபடுத்தி எமது குரு முதல்வர்கள் வாழ்ந்த வீட்டினை தருமாறு அரசாங்கத்திடம் கோரியதன் பயனாக அது எமக்கு மீள கிடைத்தது.
1970 ஆண்டு தயாரிக்கப்பட்ட குறித்த பாடசாலை வளாகத்தின் நில அளவைப் படத்தில் குறித்த இல்லம் அமெரிக்கன் மிஷனுக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இரண்டாயிரம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நில அளவை படத்தில் குறித்த இடம் காட்டப்படாததோடு அதிகாரி ஒருவரின் வேண்டுகோளில் வழங்கப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசாங்கத்தினால் எமக்கு மீள வழங்கப்பட்ட தற்போது பிரச்சினை உருவாகியுள்ள இல்லம் தொடர்பான ஆவணம் தற்போதும் எம்மிடம் இல்லை. இவ்வாறான நிலை இருக்கும்போது கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளையும் யாழ்.அரசாங்க அதிபரிடமும் நாம் சென்று இது குறித்து தெரியப்படுத்தினோம்.
குறித்த இல்லம் எமக்கானது என நிரூபிப்பதற்கு
சிறிது கால அவகாசம் தேவை எனவும் அதுவரை பாடசாலை சமூகத்தை பொறுமை காக்குமாறு கேட்டிருந்தோம்.
கடந்த காலங்களில் பாடசாலை அதிபர்களாக இருந்தவர்களுக்கு எமது செயற்பாடுகள் தொடர்பில் நன்கு தெரியும், எம்மோடு நல்ல உறவைப் பேணி இருந்தார்கள். தற்போது ஒரு சிலரின் தூண்டுதலினால் மாணவர் சமுதாயம் தவறாக வழி நடத்தப்பட்டுக்கொண்டிருப்பது எமக்கு மன வேதனையைத் தருகிறது.
நாம் பாதுகாக்கக் கேட்பது எமது இல்லத்தை மட்டும் அல்ல அது தமிழ் மக்களுடைய வரலாற்றிடம்.
போர்த்துக்கீசர் காலத்தில் கட்டப்பட்ட மிஷனரிமாரின் கட்டடம் 1816 ஆம் ஆண்டு மீள நிர்மாணிக்கப்பட்டது. உத்தியோகபூர்வமான எமது இல்லம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்கிறோம்.
நாம் எதிர்பார்க்கும் ஆவணம் ஒருவேளை பாடசாலைக்கு கிடைக்கப் பெற்றால் முழுமனதுடன் அதனை பாடசாலைக்கு திருப்பிக் கையளிப்போம் என்றார்கள்.