பொலிஸார் பொதுமக்களுடன் சரியான தொடர்புகளை பேணிக்கொண்டால் கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ள முடியும். பொலிஸார் ஊடகங்களுடன் சரியான முறையில் தொடர்புகளை வைத்திருந்தால் மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படாது செயற்பட முடியும் என்று இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவே தெரிவித்தார்.
யாழ்ப்பாணத் வந்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று(ஜூன் 30) பொலிஸாருக்கான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டார்.
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய காங்கேசன்துறை, முல்லைத்தீவு, மன்னார் போன்ற பகுதிகளில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகள் என்ற ரீதியில் ஊடகவியலாளர்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது? அத்துடன் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடன் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பது என்பது தொடர்பில் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்க பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸார் செயற்பட வேண்டும். போராட்டங்களைத் தடுக்கும்போது முரண்பாடான நிலைமை ஏற்படுகின்றது.
ஊடகவியலாளர்கள் 24 மணி நேரமும் சமூக சேவையில் ஈடுபடுகின்றனர். பொலிஸாரும் 24 மணி நேரமும் கடமையில் ஈடுபடுகின்றனர். இந்த இரு தரப்பினரின் சேவைகளும் சமூகத்துக்கு அவசியமானது என்றும் அவர் தெரிவித்தார்.