ஆடை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22/09) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய திருமணமான மாணவி உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர் 9 ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று, பல்கலைக்கழக இறுதி ஆண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இச் சோக விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த மாணவியின் ஆடை பின் சக்கரத்தில் எதிர்பாராதவிதமாகச் சிக்குண்டதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவிக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளாவதுடன், அவரது கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பாக நிந்தவூர் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவிற்கமைய, திடீர் ம’ரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

அத்துடன் பிரேத பரிசோதனையின் பின்னர், தலையில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக உண்டான தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share this Article
Leave a comment