மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் பகுதியில் உள்ள கல்கந்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, அங்குள்ள தோட்டக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக, மவுசாக்கலை நீர்த்தேக்கத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த தேயிலைத் தோட்டத்தின் ஒரு பெரிய பகுதியில் இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதியும் முற்றாக மண் மற்றும் கற்களால் மூடப்பட்டுள்ளமையினால் தடைப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடைப்பட்டுள்ளமையால் தோட்டத்திற்குச் செல்வதற்கு வேறு மாற்று வீதிகள் ஏதும் இன்மையால் அங்கு வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஆபத்து அபாயமுள்ள வீடுகளில் வசிக்கும் குடும்பங்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புமாறு தோட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும், இந்த மண்சரிவு தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.