“மக்கள் செயல்” அமைப்பின் ஏற்பாட்டில் “உரிமைப்பந்தம்” அமைதிவழி மக்கள் எழுச்சி!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

“உரிமைப்பந்தம்”  அணையா விளக்கு போராட்டத்தின் ஆறு அம்சக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தும் அமைதிவழி மக்கள் எழுச்சி மக்கள் செயல் (People’s Action) அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வு விபரங்கள்

நிகழ்வு: உரிமைப்பந்தம்

இடம்: செம்மணி அணையா விளக்கு திடல்

திகதி: 28-06-2026

நேரம்: மாலை 4.00 மணி

நிகழ்வு தொடராபிலான ஊடக அறிக்கை…

செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுகள் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் உண்மைகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதி கோரும் குரலை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், “மக்கள் செயல்” அமைப்பின் ஏற்பாட்டில் “உரிமைப்பந்தம்” எனும் அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு, கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற “அணையா விளக்கு” போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளையும் மீண்டும் உறுதியுடன் வலியுறுத்தும் மக்கள் ஒன்றுகூடலாக அமைகிறது.

செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் வெறும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் அல்ல. அவை இன்னும் உண்மையைத் தேடி காத்திருக்கும் குடும்பங்களின் சாட்சிகளாகவும், நீதியை எதிர்நோக்கும் ஒரு மக்களின் வரலாற்று நினைவுச் சின்னங்களாகவும் உள்ளன.

இந்தப் பின்னணியில், எமது கோரிக்கைகள் பின்வருமாறு மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன:

செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் சர்வதேச கண்காணிப்புடன், சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

மனிதப் புதைகுழி அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் அனைத்து மனித எச்சங்களும் மற்றும் சான்றுகளும் சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப பாதுகாக்கப்பட்டு, அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் உண்மையை அறியும் உரிமை முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மனிதப் புதைகுழிகள் தொடர்பான உண்மையை வெளிக்கொணர சுயாதீனமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதுவரை கண்டறியப்பட்ட மற்றும் இனிமேல் அடையாளம் காணப்படும் அனைத்து மனிதப் புதைகுழிகளும் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த விசாரணைகள் அரசியல் தலையீடுகள் இன்றி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய வெளிப்படைத்தன்மையுடனும் சர்வதேச தரங்களுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உரிமைப்பந்தம் நிகழ்வு பழிவாங்கலுக்கானதோ அல்லது வெறுப்பைத் தூண்டுவதற்கானதோ அல்ல. மாறாக, உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மனித மாண்பிற்கான உரிமையை வலியுறுத்தும் அமைதிவழி மக்கள் எழுச்சியாகும்.

எனவே, மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மதிக்கும் அனைத்து மக்களும், சிவில் சமூக அமைப்புகளும், மதத் தலைவர்களும், மாணவர்களும், அரசியல் கட்சிகளும் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

Share this Article
Leave a comment