புங்குடுதீவு பிரதேச மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் சீரற்றுக் காணப்படுகின்றது என்று வேலணை பிரதேசசபை உறுப்பினரும் சூழகம் அமைப்பின் செயலாளருமான கருணாகரன் நாவலன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, புங்குடுதீவு மருத்துவமனையில் ஊசி மருந்துகள், சேலைன் போன்றவற்றுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளாக புங்குடுதீவு மருத்துவமனைக்கு சிங்கள மொழி தெரிந்த மருத்துவர்களே நியமிக்கப்படுகின்றனர். மொழி தெரியாமல் மருத்துவரும் நோயாளிகளும் திண்டாடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
புங்குடுதீவு உலகமையத்தினரும் கனடா-புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினரும் இணைந்து பல லட்ச ரூபா நிதியுதவியில் நோயாளிகளுக்கான கட்டில்கள், மின்விசிறிகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவருக்கான ஆசனங்கள் போன்றவற்றை வழங்கியிருந்தனர் .
அதே போன்று எனது தனிப்பட்ட நிதியுதவி ஊடாகவும் பல்வேறு சமூக ஆர்வலர்களினதும் தனிப்பட்ட நிதியுதவியூடாகவும் பல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் தற்போதுள்ள மருத்துவர்கள் நோயாளிகளை மருத்துவமனையில் தங்க வைத்துப் பராமரிப்பதில்லை . கடுமையான சுகவீனம் என்றாலும் பனடோல் போன்ற மருந்துகளைக் கொடுத்துவிட்டு சுய விருப்பத்தில் வீடு செல்வதாக ஒரு படிவத்தின் கீழ் கையொப்பம் பெற்றுவிட்டு வீடுகளுக்கு அனுப்புகின்றனர் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
புங்குடுதீவு மருத்துவமனையின் நோயாளர் காவு வண்டி கடந்த ஏழு மாதங்களாக பழுதடைந்த நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள வாகன திருத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் நயினாதீவு, நெடுந்தீவிலுள்ள நோயாளர்களின் அவசர சிகிச்சைக்கு சுமார் 25 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையின் நோயாளர் காவு வண்டியைப் பயன்படுத்துகின்ற சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் நோயாளிகள் பல மணித்தியாலங்கள் கடந்து காத்திருக்கும் அவலநிலை தொடர்கின்றது.
இவ்வாறான நிலையில் புங்குடுதீவு மருத்துவமனையில் நிலவும் சீரற்ற மருத்துவ சேவைகளை சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு விரைவு நோயாளர் காவு வண்டிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், ஏனைய சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்து வழங்குவதற்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.