புகையிரத ஆணைச்சீட்டை எடுத்து அதன் மூலமாக ரெயில்வே ரிக்கெற் எடுத்துப் புகையிரதத்தின் மூலமாகப் பயணம் செய்வோர் இந்த வருடம் முதலாக மிகவும் நேர்மையாக நடக்க வேண்டும்.
16 வயதைத் தாண்டிய ஒவ்வொரு பயணியும் புகையிரத ஆணைச்சீட்டைத் தனித் தனியாகப் பெறும் போது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கட்டாயமாகக் குறிப்பிட்டு ரிக்கெற் வழங்கும் முறை பின்பற்றப்படுகின்றது.
புகையிரதத்தில் பயணிக்கும் போது ரிக்கெற் பரிசோதகர் தேசிய அடையாள அட்டையையும் பரிசோதிக்கின்றனர்.
ஆகவே உரியவர்கள் மட்டும் பயணிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
முன்னர் அரச சேவையில் இருப்போர், ஓய்வூதியம் பெறுவோர் தமக்கும் தமது பிள்ளைகளுக்கும் புகையிரத ஆணைச்சீட்டைப் பெறும் போது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை ரிக்கெற்றில் இடுவது கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.
இதனால் புகையிரத ஆணைச்சீட்டைப் பெற்ற ஒருவர் தமது உறவினர் ,நண்பர் குடும்பத்திலிருந்து வேறு ஒருவரைப் பயணத்தில் சேர்த்த நிகழ்வுகளும் நடந்திருக்கலாம். எல்லோருமல்ல சிலர் அப்படிச் செய்திருக்கலாம்.
இனிமேல் புகையிரத ஆணைச்சீட்டு விடயத்தில் மிகவும் கவனமாக இருங்கள். பிழை விட்டால் உங்களுடைய உத்தியோகம் அல்லது ஓய்வூதியம் பறிபோகலாம். சட்ட நடவடிக்கைத் தண்டனையையும் பெறலாம்.
எமது நாட்டில் அரச திணைக்களச் சேவையில் இருப்போர் ஒரு வருடத்தில் 03 சோடிப் புகையிரத ஆணைச்சீட்டுக்களை விடுமுறைக்காலச் சீட்டாகப் பெற்றுப் புகையிரதத்தில் பயணிக்கலாம்.
ஒரு வருடத்தில் குடும்பமாக 03 முறை ஒரு பயணம் போக வரப் பயன்படுத்தலாம்.
அல்லது 16 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் தனித்தனியாக 03 முறை ரெயில் பயணம் செய்யப் பயன்படுத்தலாம். அது போல ஓய்வூதியம் பெறும் அரச உத்தியோகத்தர் ஒருவர் குடும்பமாக 03 முறை அல்லது 16 வயதுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் தனித்தனியாக 03 முறை ரெயிலில் பயணம் செய்ய முடியும்.
இந்தப் 16 வயதுக்கு மேற்பட்ட ஒரு அங்கத்தரின் பெயரில் பெற்ற புகையிரத ஆணைச்சீட்டை வேறு ஒருவர் பயன்படுத்திப் பிடிபட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆகவே 100 வீதம் நேர்மையாக நடந்து உங்களுடைய அரச சேவைச் சம்பளம் அல்லது ஓய்வூதியம் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.