அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நிலை உருவாக்கப்படுவதனூடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (ஜூன் 9) பிற்பகல் இடம்பெற்ற “CVCD Excellence Awards” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நாட்டில் கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, அனைவரும் சரியான வயதில் கல்வியை நிறைவுசெய்து முன்னேறிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் – நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 1,70,000 மாணவர்கள் உயர்கல்விக்குத் தகுதி பெறுகின்றனர். அவர்களில் சுமார் 40,000 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெறுகின்றனர். மேலும் 30,000 முதல் 40,000 பேர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார்கள். ஆனால் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதிபெறும் 40,000 பேருக்கு மேலதிகமாக மேலும் 25,000-30,000 பேரை இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகக் கட்டமைப்பு ஒன்று எம்மிடம் உள்ளது. அதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கீழ் உள்வாங்கப்படாத பல்கலைக்கழகங்களும் உள்ளன. மேலும், இலாபமீட்டும் மற்றும் இலாப நோக்கற்ற பல்கலைக்கழகக் கட்டமைப்பும் உள்ளது. எனவே, இந்த மூன்று முறைகளையும் நடைமுறைப்படுத்துவதா அல்லது ஒரு முறையை உருவாக்கி பல்கலைக்கழகக் கட்டமைப்பை மீட்டெடுப்பதா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோன்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசாங்கம் உதவித்தொகை வழங்குகிறது. மேலும் பல மாணவர்கள் வெளியே சென்று பணம் செலுத்தி உயர்கல்வி பெறுகின்றனர். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள சரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
இது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு முறைகளில் செயல்படுத்தப்படுகிறது. சில நாடுகள் மாணவர்களுக்கு கடன் வழங்குகின்றன. இன்னும் சில நாடுகள் பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு உதவிகளை வழங்குகின்றன. நாம் இது குறித்து ஆராய வேண்டும். அதிகபட்ச எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கல்வியை வழங்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எம்மால் இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாது. ஏனெனில், ஒரு நாடாக முன்னேறிச் செல்லும்போது, பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஏராளமான நிபுணர்கள் நமக்குத் தேவைப்படுகின்றனர்.
மேலும், கல்வியின் தரநிலை மற்றும் தரம் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அன்று, ஆசியப் பல்கலைக் கழகங்களின் பட்டியலில் நம் நாட்டுப் பல்கலைக் கழகங்கள் முதன்மை இடத்தில் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது.
எமது பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை மீண்டும் எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது பல்கலைகழகங்களின் தரம் மற்றும் நற்பெயரை உலகிற்கு எவ்வாறு மீண்டும் உறுதிப்படுத்துவது என்பதை நாம் கண்டறிய வேண்டும். இதன் மூலம் உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை நமது பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும். நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு இது நல்லதொரு நிலை என்றே கூற வேண்டும்.
உபவேந்தர்களைத் தாக்கி, கல்விக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதன் மூலம் தரமான பல்கலைக்கழகக் கட்டமைப்பைப் முன்னெடுக்க முடியாது. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.