நெடுந்தீவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு நெடுந்தீவிலுள்ள நிறுவனங்கள் கைகொடுத்து உதவியதாக நெடுந்தீவு பிரதேச செயலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக வீடுகளில் சமைக்க முடியாத நிலைமையை எதிர்கொண்டவர்களுக்கும், நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கும் இரு நேர சமைத்த உணவுப்பொதிகளை நெடுந்தீவு – டெல்ப் சமுத்திரா தனியார் நிறுவனத்தினர் வழங்கியிருந்ததுடன் அக்குடும்பங்களுக்கு நிதி உதவியினையும் வழங்கியிருந்ததுடன் இவ்உதவிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் விநியோகநடவடிக்கைகளினை நெடுந்தீவு வசப கடற்படையினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களுக்கான ஏனைய நேர உணவுகளையும் உபசரணைகளையும் வழங்குவதற்கான அனுசரணையினை நெடுந்தீவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கேதீஸ்வரநாதன் அவர்களும் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினரும் வழங்கியிருந்ததாக அச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.