நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக கன்னியாவில் புதிய கட்டுமானப் பணி – சாணக்கியன் எம்.பி.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா பகுதியில் இன்று (22/07) காலை தொல்பொருள் திணைக்களத்தினால் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்,

கன்னியா பகுதி தொடர்பில் 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் படி, அப்பகுதியில் மதம் சார்ந்த எந்தவித கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இணைந்து மதம் சார்ந்த கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் தொடர்புகொண்டு உரையாட முயற்சித்ததாகவும், அண்மையில் அவருடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்த நிலையிலும், இன்றைய நடவடிக்கை திணைக்களத்தின் செயற்பாடு குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி கருத்து தெரிவிக்கையில், கன்னியா பகுதி தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு இருந்தால் அதனை நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.

தற்போதைய சூழ்நிலையில் சம்பவம் தொடர்பில் நேரடியாக கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்த அவர், தொல்பொருள் திணைக்களம் குறித்து சந்தேகம் கொள்ள வேண்டாம் என்றும், நீதிமன்றத் தீர்ப்பும் தொல்பொருள் சட்டமும் அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Share this Article
Leave a comment