நகர்ப்புறங்களில் மரங்களை நடும்போது தரமான மரக்கன்றுகளைப் பயன்படுத்துவதற்கான அமைப்பைத் தயாரிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புறநகர் பகுதிகளில் விழும் அபாயத்தில் உள்ள மரங்களை அடையாளம் கண்டு அவற்றால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்கு நீண்டகால தீர்வை தயாரிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 300 அபாயகரமான மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன. குறித்த மரங்கள் மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றன. எனவே, இது தொடர்பில் ஆராய்ந்து குறித்த மரங்களை அகற்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 100,000 க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் உள்ளன. அவற்றில் 300 அபாயகரமானவை இனங்காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பில் முறையான ஆய்வின் பின்னர் எதிர்கால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இதற்காகப் பயன்படுத்தும் தொழில்நுட்ப முறைகளை ஆய்வு செய்து, தாவரவியல் பூங்கா மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்ப ஆதரவைப் பெறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.