இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் நீண்ட வங்கி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதும், அரசாங்கம் தேசிய உள்நாட்டுக் கடன்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்திருப்பதும் நாட்டில் பல்வேறு கருத்துக்களை உருவாக்கியிருக்கின்றன.
நாளை அதாவது ஜூன் மாதம் 29 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 3ஆம் திகதி முதல் வங்கிகளுக்கு 5 நாள்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேசிய உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்க வசதியாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த விடுமுறை நாள்களில் வங்கி ஏரிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க முடியாது என்றும், இணையவழிக் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ள முடியாது என்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பால் சில அரச வங்கிகள் விற்பனை செய்யப்படவுள்ளன என்றும் பல செய்திகள் வெளியாகியுள்ளன.
தேசிய உள்நாட்டு கடன் மறுசீரமைப்புத் தொடர்பாக அரசாங்கம் பொதுமக்களுக்கோ, வங்கிகளுக்கோ எந்தத் தகவல்களையும் பகிரங்கப்படுத்தாது இருக்கின்றமை இவ்வாறான தகவல்கள் பரவக் காரணமாக இருக்கின்றன. அதேநேரம் எதிர்கட்சிகள் வெளியிட்டுவரும் கருத்துக்களும் இவ்வாறான சந்தேகங்கள் எழக் காரணமாக இருக்கின்றன. தேசிய உள்நாட்டு கடன் மறுசீரமைப்பில் கடன்களை இரத்துச் செய்ய அரசாங்கம் முயலுமானால் அதைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி நாட்டின் வங்கிக் கட்டமைப்புக்கு இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின்போது வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை சரியானது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விடுமுறையின் ஊடாக உள்நாட்டுக் கடன்மறுசீரமைப்பைத் தாக்கிக் கொள்வதற்கான கால அவகாசம் வங்கிகளுக்குக் கிடைக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம், வங்கி முகாமையாளர்களுடன் இந்த விடயங்கள் தொடர்பாகக் கேட்டபோது, ஏரிஎம் இயந்திரம் மற்றும் இணையவழிக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வழமைபோன்று நடைபெறும் என்று குறிப்பிட்டனர். ஐந்து நாள்களுக்குப் போதுமான பணத்தை ஏரிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின்போது எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பது தொடர்பில் அரசாங்கம் வெளிப்படுத்தாமையே மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்துக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆயினும் அவை தொடர்பான விவரங்களை வெளிபடுத்தினால் மக்கள் பீதியடைந்து வங்கிகளில் இருந்து பணத்தை அதிகளவில் மீளப் பெற முயலக் கூடும் என்பதாலேயே அரசாங்கம் இந்த விடயங்களை வெளிப்படுத்தத் தயங்கியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
தேசிய உள்நாட்டு கடன் மறுசீரமைப்பால் வங்கி வைப்புக்களுக்கோ, வட்டிகளுக்கோ, ஊழியர் சேமலாபநிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பற்றுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அரசாங்கம் உறுதியளித்திருக்கின்றது. அதேநேரம் எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கையையும் புறந்தள்ளிவிட முடியாது. எதிர்வரும் நாள்களின் இவற்றின் பலாபலன்கள் வெளித்தெரியும். அதுவரை பொறுத்திருக்கவே வேண்டும்.