டியாகோ கார்சியா தீவில் புகலிடம் பெற்றுள்ள ஈழத் தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கனடா செல்லும் நோக்குடன் மீன்பிடிப் படகில் பயணித்த ஈழத் தமிழர்கள் படகு பழுதடைந்ததால் அமெரிக்க – பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவில் தஞ்சமடைந்தனர்.
அவர்களின் தஞ்சக் கோரிக்கையை ஏற்க பிரிட்டன் மறுத்ததுடன், ருவாண்டாவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் கீழ் அங்கு அவர்களை அனுப்ப பிரிட்டன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அதையடுத்துப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் இலங்கை திரும்பினர், பலர் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ள ரீயூனியன் தீவுக்குச் சென்றனர்.
தற்போது டியாகோ கார்சியோ தீவில் 60 ஈழத் தமிழர்கள் உள்ள நிலையில் அவர்கள் இலங்கை திரும்ப மறுத்து வருகின்றனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் இதுவரை சுமார் 12 தற்கொலை முயற்சிகள் நடந்துள்ளன. 2 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன என்று கூறப்படுகின்றது.