ஜெய்ப்பூர் புனர்வாழ்வு நிலையத்தின் புனரமைக்கப்பட்ட கட்டட மீள்திறப்பு விழா!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தின் மீள்திறப்பு விழாவும், புதிய செயற்கைக் கால் தயாரிப்புத் திட்டத்தின் ஆரம்ப விழாவும் இன்று (26.06) காலை நடைபெற்றது.

யாழ் சுண்டிக்குளி – கொழும்புத்துறை வீதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, இந்தியாவின் ஜெய்ப்பூர் செயற்கைக் கால் பொருத்தும் நவீன முறையை யாழ்ப்பாணத்திலேயே அறிமுகப்படுத்தி, பயனாளிகளுக்கு அதனை முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புனரமைக்கப்பட்ட கட்டடம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன், பயனாளிகளுக்கான செயற்கைக் கால்களும் வழங்கி வைக்கப்பட்டன. இப்புதிய செயற்றிட்டமானது, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனங்கள் மற்றும் லண்டன் ஸ்கூல் ஒவ் கொமர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. டிம் அண்ட்ராடி ஆகியோரின் நிதியுதவி மற்றும் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் நிறுவனத்தின் முகாமைத்துவ சபைத் தலைவர் திருமதி கோசலை மதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட மேலதிகச் செயலாளர் ஜெயகரன், யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் பிரதேச செயலாளர்கள், சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களான மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Share this Article
Leave a comment