சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் கனடாவினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சுவாமி நீதிராஜா அவர்களின் முழுமையான நிதியுதவியில் புங்குடுதீவில் கிணறொன்று புனரமைக்கப்பட்டுள்ளது .
மேற்படி நன்னீர் கிணறானது புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் சங்கதார்கேணியில் குறிகாட்டுவான் நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ளது . 1990 க்கு முன்பிருந்தே நான்காம் வட்டாரம் நுணுக்கல் ,தொழிலாளர்புரம் பகுதிகளை சேர்ந்த 50 க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் இக்கிணற்றினை குளிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர் .
புங்குடுதீவு சந்தையடி மணியம் கடை உரிமையாளர் வே. சுப்பிரமணியம் அவர்களின் மூத்த புதல்வியாகிய திருமதி துரைச்சுவாமி கருணாகடாட்சம் அவர்களுக்கு சொந்தமான காணியிலேயே இக்கிணறு அமைந்துள்ளது . மேற்படி கிணற்றினை நான்காம் வட்டார மக்கள் பயன்படுத்துவதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் சூழகம் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க தொடர்ந்து இக்கிணற்றினை பயன்படுத்துவதற்கு காணி மற்றும் கிணற்றின் உரிமையாளர்களான துரைச்சுவாமி குடும்பத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர் . குறிகாட்டுவான் பிரதான வீதியில் அமைந்துள்ள பெறுமதிமிக்க இந்த காணியில் அமைந்துள்ள இக்கிணற்றினை புனரமைத்து தந்ததோடு தொடர்ச்சியாக பொதுமக்களின் பாவனைக்காக வழங்கிய மாணிக்கராசா துரைச்சுவாமி , சிவராசா துரைச்சுவாமி , நீதிராசா துரைச்சுவாமி ஆகியோருக்கும் புங்குடுதீவு மக்கள் சார்பில் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தினர் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர் .
ரூபாய் இரண்டு இலட்சத்து அறுபதினாயிரம் செலவில் இக்கிணறு மீள் புனரமைக்கப்பட்டதோடு பொதுமக்கள் குளிப்பதற்காக சுற்று மதில் அமைக்கப்பட்டதோடு கோமாதாக்களுக்கான நீர் நிரப்பும் தொட்டிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
அத்தோடு இக்கிணறும் , புங்குடுதீவு மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்ற கிணறும் கடந்த வாரம் சுத்தம் செய்யப்பட்டிருந்தன . திரு . துரைச்சுவாமி நீதிராஜா அவர்களின் நிதியுதவி ஊடாக சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் கருணாகரன் குணாளன் அவர்களின் கண்காணிப்பில் இச்செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன .