கோப்பாய் வாள்வெட்டு!- குடும்பத்தினர் உட்பட 11 பேர் கைது!!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கோப்பாயில் சில நாள்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவி, மனைவியின் தாய், தந்தை உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞரின் அட்டகாசம் தாக்க முடியாது இவர்கள் திட்டமிட்டு இளைஞரைக் கொலை செய்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 21 ஆம் திகதி இரவு கோப்பாய் மத்தியில் 30 வயதான ரவீந்திரன் அஜித் என்பவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொல்லப்பட்டார். வீதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்கான அஜித் வீட்டுக்கு தப்பியோடிச் சென்றபோது வீட்டுக்குள் புகுந்த கும்பல் அங்குவைத்து அஜித்தை சரமாரியாக வெட்டிக் கொன்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அஜித் கோப்பாய் சந்தியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் ஒன்றை நடத்தி வருகின்றார். ஒரு பிள்ளைக்குத் தந்தையான இவருக்கும் மனைவிக்கும் சுமுகமான உறவு இருக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

அஜித் மனைவி மற்றும் குழந்தையைப் போதையில் தாக்குவது வழமை என்றும், அதனால் வீட்டில் நித்தமும் பிரச்சினை காணப்படும் என்றும் அயலவர்கள் கூறுகின்றனர். அத்துடன் மனைவியின் குடும்பத்தினருடனும் அஜித் தொடர்ச்சியாக முரண்பட்டு வந்தார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக அஜித் வீட்டுக்கு வருவது குறைவதைக் குறைத்து மோட்டார் சைக்கிள் திருத்தகத்திலேயே தங்குவார் என்றும், இரவு உணவு எடுக்கவே வீட்டுக்கு வருவார் என்றும் கூறப்படுகின்றது.

தொடர் பிரச்சினைகளால் விரக்தியுற்ற குடும்பம், அஜித்தை திட்டமிட்டுக் கொலை செய்துள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Article