காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இரும்புகளை இரகசியமாக விற்க முயற்சி.
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் உள்ள பல கோடி ரூபா பெறுமதியான இரும்புகளை உரிய கேள்வி கோரல் ஏதும் இன்றி இரகசியமாக தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு விற்பதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக காங்கேசன்துறை லங்கா சிமெந்து தொழிற்சாலை பொறுப்பு உத்தியோகத்தர் பொன்னையா விமலநாதன் குற்றஞ் சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
திறந்த விலை மனுக்கோரல் இன்றி சிமெந்து தொழிற்சாலையின் இரும்புகளை தெற்கைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வதற்கு சில அரச அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
லங்கா சிமெந்து நிறுவனத்தில் சுமார் 250 இற்கு மேற்பட்டவர்கள் பங்குதாரர்களான உள்ள நிலையில் அவர்களுக்கு தெரியாமல் இரும்புகளை எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் முழு வீச்சில் இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
யாழ்ப்பாணத்தில் இரும்பின் கொள்முதல் விலை சுமார் 60 ரூபாய்க்கு மேல் காணப்படுகின்ற நிலையில் 20 தொடக்கம் 25 ரூபாய்க்கு லங்கா சிமெந்துத் தொழிற்சாலையின் இரும்புகளை தனியாருக்கு விற்க முயற்சிகள் இடம்பெறுகின்றன.
கடந்த காலங்களில் சிமெந்து தொழிற்சாலையில் இருந்து திருடப்பட்ட இரும்புகள் தொடர்பில் தகவல்களை வௌிப்படுத்திய எனக்கு 33 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஏனைய சக உத்தியோகத்தர்களையும் மட்டுப்படுத்தப்பட்ட கொடுப்பனவை கொடுத்து இடைநிறுத்தியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விபரங்களை அறிய யாழ்.மாவட்ட அரச அதிபரைத் தொடர்புகொண்டபோதும் இது குறித்து ஆராய்ந்து தகவல்களைத் தெரிவிப்பதாக அவர் கூறினார்.