கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை நடத்துவதற்காக இந்திய அரசு 1.01 கோடி ரூபாவை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்று இந்திய ஊடகமான தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.
கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நாளைமறுதினம் ஆரம்பித்து இரு நாள்கள் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்திருவிழாவின் முதல் நாள் இரவு மற்றும் அடுத்த நாள் காலையில் பக்தர்கள் அனைவருக்கும் இலங்கைக் கடற்படை சார்பில் உணவு வழங்கப்பட்டது. தற்போது இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியால் இந்த ஆண்டு கச்சதீவு திருவிழா நாளில் இந்தியாவில் இருநது வரும் பக்தர்களுக்கு இரவு உணவு வழங்கப்படாது. மறுநாள் காலை சிற்றுண்டி மட்டும் வழங்கப்படும் என்று இலங்கை கடற்படை நிர்வாகம் அறிவித்தது.
மேலும் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான உணவைக் கொண்டுவர வேண்டும் என்றும் இலங்கைக் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் இருந்து கச்சதீவு செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்கு தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பான செய்தி கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி தினகரன் நாளிதழில் வெளியானது.
இந்தநிலையில் கச்சதீவு திருவிழா நடத்துவதற்கு ஒன்றிய அரசு ஒரு கோடியே ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவை இலங்கை அரசுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளது. (இலங்கை மதிப்பில் 4.40 கோடி ரூபா). கச்சதீவில் பக்தர்களுக்குத் தேவையான கழிப்பறைகள் கட்டுதல், குடிநீர் வசதி, சோலார் மின்விளக்குகள் அமைத்தல், உணவு உள்ளிட்டவைகளுக்காக மேற்கண்ட தொகையை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்கவுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு முதல் நாள் இரவு மற்றும் காலையில் வழக்கம்போல் உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும் என்று இலங்கைக் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 3ஆம் திகதி (நாளைமறுநாள்) மாலை 5 மணிக்கு கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருப்பலி பூசை, சிலுவைப்பாடு நிகழ்ச்சி, தேர் பவனி, திருவிழா திருப்பலி என இரண்டு நாள் திருவிழாவாக நடைபெறுகின்றது.
இதில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 60 விசைப் படகுகள், 12 நாட்டுப் படகுகள் உள்ளிட்ட 72 படகுகளில் ஆயிரத்து 960 ஆண்கள், 379 பெண்கள், 69 சிறுவர்கள் என தமிழக பக்தர்கள் படகு செலுத்தும் பணியாளர்கள், பாதிரியார்கள் உள்ளிட்ட தமிழக பக்தர்கள் மொத்தம 2 ஆயிரத்து 408 பேர் கச்சதீவுக்கு புனிதப் பயணம் செல்கின்றனர் என்று தினகரன் நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.