முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கையிலேயே முதற்தடவையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ வடக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் செயற்றிட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (26.05) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (NIS-26) இன் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலேயே இந்த ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றுஇடம்பெற்றது.
‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ ஆளுநரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ இன் இறுதி அறிக்கையும் ஆளுநர் உள்ளிட்ட அதிதிகளிடம் கையளிக்கப்பட்டது.
இதன் பின்னர், உலக வங்கிப் பிரதிநிதிகள், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் சார்பில் கலந்துகொண்ட விசேட பிரதிநிதி மற்றும் ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், மன்னார் மாவட்டச் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா. முகவர் அமைப்புக்கள், வர்த்தக மற்றும் வணிக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.