கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆடி அமாவாசை தினத்தில் இந்து சைவ மக்கள் தங்களது பிதிர் கடன்களை நிறை வேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால், பிதிர் கடன்களை நிறைவேற்ற எதிர்ப்பார்த்திருப்பவர்களை அவர்களது வீடுகளிலேயே அதனை செய்யுமாறு சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் அமைந்துள்ள இந்துமத குருபீட காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (ஜூலை 31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
இந்து சைவ மக்கள் தங்களது பிதிர் கடனை நிறை வேற்றும் ஆடி அமாவாசை தர்பணம் எதிர்வரும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுட்டிக்கப்படவுள்ளது. இந்த பிதிர் கடன் நிறை வேற்றும் செயற்பாடுகள் ஆறு, நதி அல்லது கடற்கரையோரங்களிலேயே முன்னெடுக்கப்படும்.
எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில், இந்து மக்களால் பிதிர் கடன்களை நிறைவேற்றுவதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்துள்ள உறவினர்களுக்கான பிதிர் கடன்களை செலுத்த வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் வருடந்தோறும் உத்தராயணம் ஆரம்பமாகும் தை மாதம் அல்லது தட்சணாயனம் ஆரம்பமாகும் ஆடி அமாவாசை தினத்திலோ, அல்லது புரட்டாசி மாத்திலோ இந்த பிதிர் கடன் செலுத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.
இந்நிலையில் ஆடி அமாவாசை தினத்தன்று பிதிர் கடன்களை நிறைவேற்ற எதிர்ப்பார்த்திருப்பவர்கள் , தண்ணீர் நிரம்பிய பாத்திர மொன்றை எடுத்து , அதில் சிறிதளவு பால், மஞ்சள் – அறுகம்புல், கோமியம் மற்றும் சாணம் போன்ற பொருட்களை இட்டு, அதனை மலர்களால் பிரார்த்தனை செய்து அந்த நீரில் நீராட முடியும்.
இதேவேளை, ஆலயங்களுக்கு அருகில் வசிப்பவர்கள், அந்த ஆலயங்களுக்குச் சென்று பிதிர் கடன்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அல்லது குருக்கள் அல்லது புரோகிதர்களை தங்களது வீடுகளுக்கு அழைத்து வந்தும் பிதிர் கடன்களை நிறைவேற்ற முடியும். அவ்வாறு எந்தவொரு வசதியும் இல்லாதவர்கள் உயிரிழந்த உறவினர்களின் புகைப்படங்களை சுத்தம் செய்து , அவற்றுக்கு துளசி மாலைகளை அணிவித்து, விபூதி, சந்தனம், குங்கும மிட்டு , தீப , தூபம் காண் பித்து வழிபடுவதுடன் , வீட்டில் தயாரித்த உணவுப் பொருட்களை படைத்தும் பிதிர் கடன்களை நிறை வேற்ற முடியும் என்றார்