அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 14 ஆவது பேரவை கூட்டம் நேற்று(செப்ரெம்பர் 18) கொழும்பில் நடைபெற்றது.
இலங்கை அரசின் சார்பில் சர்வதேச வர்த்தக அலுவலகத்தின் பிரதம பேச்சுவார்த்தையாளர் கே.ஜே.வீரசிங்கவும், அமெரிக்கத் தரப்பில் இருந்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கவின் ஜக்கிய நாடுகளுக்கான பதில் உதவி வர்த்தகப் பிரதிநிதியான பிரெண்டன் லிஞ்ச் ஆகியோர் இந்த தொழில்நுட்ப மட்டக் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கிருந்தனர்.
வர்த்தகம், முதலீடு, சுங்கம், தொழிலாளர் உறவுகள், புலமைச் சொத்து, விவசாயம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவன அதிகாரிகள் குறித்த பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான பேரவை கூட்டத்தில், முதலீட்டு சூழலை பாதிக்கும் கொள்கைகள், அண்மைய தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புகள், புலமைச் சொத்து பாதுகாப்பு மற்றும் அமுல்படுத்தல் என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், சுங்கம் மற்றும் வர்த்தக வசதி அளித்தல், வர்த்தகத்தைப் பாதிக்கும் தொழில்நுட்ப தடைகள், ஆடைகள், இரத்தினங்கள் மற்றும் நகைகள் அதே போன்று விவசாயத்திற்கான சந்தைப் பிரவேசம் உள்ளிட்ட இரு நாடுகளும் பரந்த அளவிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்தின.
டிஜிட்டல் பொருளாதாரம், இரத்தினங்கள் மற்றும் ஆபரணக் கைத்தொழில், மலர் வளர்ப்பு, படகு கட்டும் துறைகள் மற்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சி வணிகமயமாக்கல் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி குறித்தும் ஆராயப்பட்டது.
நல்லாட்சியில் கவனம் செலுத்தி, இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை இதன்போது அமெரிக்கா வலியுறுத்தியது.
அண்மையில் முன்மொழியப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டம் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை இலங்கை முன்வைத்ததோடு லஞ்சம் மற்றும் அனைத்து வகையான ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்க அரசாங்கத்தின் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சியைக் கோரியது.
பைடன் -ஹாரிஸ் நிர்வாகத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை ஆதரிப்பதற்காக வர்த்தக பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்கா இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.
அத்துடன், தொழிலாளர் சட்டங்களை உருவாக்கும் போது அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசிக்க வேண்டியதன் அவசியத்தையும் பொது மக்கள் கருத்தறிவதற்கான நியாயமான காலப்பகுதியொன்றை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமெரிக்கா வலியுறுத்தியது.
அதேநேரம், தொழிலாளர் சட்டங்களை திருத்தியமைக்கும் செயல்முறை மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் தரங்களுக்கு இணங்கிச் செயற்படுவதில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இலங்கை இதன்போது விளக்கமளித்தது.
தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் போது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும் இதன்போது இலங்கை அதிகாரிகள் விளக்கமளித்தனர்.