வீதி விபத்துகளைத் தடுக்க ஒவ்வொருவரிடமும் சமூகப் பொறுப்புணர்வு அவசியம் – வடமாகாண ஆளுநர்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு போக்குவரத்து விதிகளை மதிப்பதுடன், ஒவ்வொரு வீதி உபயோகத்தரும் பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

வீதி விபத்துகளால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று (17.11) செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், கிளிநொச்சி நகர ரோட்டரி கழகத்தின் வீதிப் பாதுகாப்புக் கல்வியகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

வீதி விபத்துகள் இன்று அன்றாடச் செய்திகளாக மாறிவிட்டதாகக் கவலை தெரிவித்த ஆளுநர், ஒரு காலத்தில் எப்போதாவது நிகழ்ந்த துயரச் சம்பவமாகக் கருதப்பட்ட வீதி விபத்துகள், தற்போது தொடர்ச்சியாக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

வீதி விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாகப் பொறுமையின்மை, சகிப்புத்தன்மையின்மை மற்றும் உயிரின் பெறுமதி குறித்த அக்கறையின்மை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், வாகனத்தின் வேகத்தை அதிகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தம்மை நம்பி ஒரு குடும்பம் காத்திருக்கின்றது என்பதைச் சாரதிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், பொலிஸார் இல்லாத இடங்களிலும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், வீதி விதிகள் பொலிஸாருக்காக உருவாக்கப்பட்டவை அல்ல; எமது உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் அல்லது மதுபானத்தைப் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்த அவர், இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக எவ்வித தயவுதாட்சண்யமுமின்றி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அண்மையில் சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் எந்தவொரு தவறும் செய்யாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் அவரது ஒன்பது வயது மகனும் உயிரிழந்தமை மிகுந்த வேதனையளிப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், விபத்துக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள் தப்பிச் சென்றமை மற்றும் சாரதியின் அடையாளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்தும் கவலை தெரிவித்தார். இவ்விடயங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

விபத்துக்குப் பின்னர் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமானதாக இருந்தாலும், உயிரிழந்தவர்களை மீண்டும் அவர்களது குடும்பங்களுடன் இணைக்க முடியாது. எனவே, இத்தகைய துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதே முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, அண்மையில் செம்மணிப் பகுதியில் யாழ்ப்பாணப் பொலிஸாரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியும் இணைந்து வாகனச் சாரதிகளிடம் மேற்கொண்ட போதைப்பொருள் பயன்பாட்டுப் பரிசோதனையைப் பாராட்டிய ஆளுநர், அன்றைய தினம் 52 சாரதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாகவும் வெவ்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாகப் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளின் பாதுகாப்பான செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

வீதி விபத்துகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதுடன், உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது மட்டுமன்றி எதிர்காலத்தில் இத்தகைய துயரங்கள் நிகழாமல் தடுப்பதற்கான சமூகப் பொறுப்புணர்வையும் அனைவரிடத்திலும் உருவாக்க வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

Share this Article
Leave a comment