ஆபத்தான விபத்துக்களில் ஈடுபடும் சாரதிகளை பரிசோதனைகளுக்காக உடனடியாக சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சில வாகன சாரதிகள் மதுபானம் அருந்துவது மாத்திரமன்றி போதைப்பொருளை உட்கொண்ட பின்னரும் வாகனங்களை செலுத்துவதாக மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய நபர்களை அடையாளம் காண, தேவையான உபகரணங்கள் தேவை என்று அவர் கூறினார்.
உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துக்களில் ஈடுபடும் சாரதிகள் கைது செய்யப்பட்டதன் பின்னர், போதைப்பொருள் உட்கொண்டார்களா என்பதை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்துவதற்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், விதிமுறைகளை திருத்துவதற்கு தேவையான கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாதம் 15ஆம் திகதி வரையில் பேருந்துகள் சம்பந்தப்பட்ட 137 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டு மொத்தம் ஆயிரத்து 135 விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஆயிரத்து 202 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டில் மொத்தம் 2 ஆயிரத்து 88 பேர் வாகன விபத்துக்களில் படுகாயமடைந்துள்ளனர்.