வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்து மத்திய வங்கியினால் அண்மையில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதற்கமைய, இதுவரை வங்கி வட்டி வீதங்களைக் குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதானம் செலுத்தும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தில் நேற்று (ஒக்ரோபர் 23) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் வங்கி வட்டி விகிதங்கள் உயர் மட்டத்தில் இருந்த போது பெறப்பட்ட நீண்ட கால வைப்புகளுக்கு வட்டி செலுத்துவதில் வர்த்தக வங்கிகளும் சில சிக்கல் நிலைமைகளை எதிர்நோக்க நேரிட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மத்திய வங்கியினால் வழங்கப்படும் வங்கி வட்டி விகிதங்களுக்கு அமைய வர்த்தக வங்கிகள் செயற்படும் என பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் மக்களின் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு மத்திய வங்கி, வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளதால், அனைத்து அரச மற்றும் தனியார் வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் மேற்படி சுற்றறிக்கைக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அந்த வங்கிகளின் வட்டி விகிதங்களைக் குறைக்க உடனடியாக கடுமையான மற்றும் நேரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.