முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சாட்சிக்கூண்டில் இருந்த போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காட்டிக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசர மருந்து கொள்முதல் நடைமுறைக்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தது தான் அல்ல என முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அப்போதைய நிதி அமைச்சரும் பிரதமருமாக இருந்த ரணில் விக்ரமசிங்கவே அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார் என கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் கெஹலிய சாட்சியமளித்தார்.
“2022ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி கோவிட் அவசர கொள்முதல் நடைமுறையை மேலும் நீடிப்பதற்குத் தான் அமைச்சரவை குறிப்பொன்றை சமர்ப்பித்த போதிலும் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக, அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அந்த முடிவின் கூட்டுப் பொறுப்புக்கு நான் கட்டுப்பட்டிருந்த போதிலும், சர்ச்சைக்குரிய அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தது தொடர்பாக வழக்கில் பெருமளவில் விவாதிக்கப்பட்டது. அதற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்பத்திரத்தை சமர்ப்பித்தது முன்னாள் பிரதமராகும்.
அமைச்சரவைத் தீர்மானங்களைச் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அமைச்சுச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கே உரியது. கொள்முதல் நடவடிக்கைகளில் நான் எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை.
மருந்து கையிருப்பு நிலைமை குறித்து மருத்துவ வழங்கல் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் சந்தன விஜேசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கிய அறிக்கைகளின் அடிப்படையிலேயே தான் முடிவுகளை எடுத்தேன். அந்தத் தொழில்நுட்பத் தகவல்களின் துல்லியத் தன்மையைப் பரிசோதிக்கும் ஆற்றல் ஒரு அமைச்சருக்கு இல்லை.
மருந்துகள் இறக்குமதி
போலி ஆவணங்களை தயாரித்து குறித்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதை அறிந்து உடனடியாக, சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தது நான் மட்டுமே.
தான் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் காரணமாக சுமார் 9 மாத காலம் சிறையில் இருக்க வேண்டியிருந்தது.
இத்தகைய சூழலில் எதிர்காலத்தில் எந்தவொரு அமைச்சரும் தனது அமைச்சின் ஊழல்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய மாட்டார்கள்.
இந்த சம்பவத்துடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை” என குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்